

சென்னை,
இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்-II வழித்தடம் 4-ல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 11, 2026) முதல் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணண் சாவடி, காட்டுப்பாக்கம், அயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன.
தொடக்க நாளான 11 அக்டோபர் 2026 அன்று, மெட்ரோ ரெயில் சேவைகள் மாலை 4 மணி முதல் தொடங்கி, இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மறுநாளான 12 அக்டோபர் 2026 முதல், இந்த 15 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவைகள் இயக்கப்படும்.
நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ ரெயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும்.
பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் மெட்ரோ ரெயில் சேவைகளைப் பயன்படுத்தி, தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.