

சென்னை,
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு பீர், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, ஒயின் போன்ற மதுவகைகள் விற்கப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 4,050 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், தற்போது 205 கடைகளில் மட்டுமே இறக்குமதி மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் உள்ளது. இவற்றில் 538 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் 301 வகையான விஸ்கி, 38 வகையான பிராந்தி மற்றும் 199 வகையான ஒயின் இடம்பெற்றுள்ளன. ஆனால், அனைத்து வகையான மதுபானங்களும் எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. விற்பனை மற்றும் இருப்பு குறைவாகவே உள்ளது.
எனவே வெளிநாட்டு மதுபானங்களை இன்னும் கூடுதலான டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்வதற்காக எப் உரிமம் பெற்ற கடைகளை எப். எல்.2 உரிமம் பெற்ற கடைகளாக தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இதற்காக மாவட்ட மேலாளர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள கடைகளை ஆய்வு செய்து, விற்பனை வாய்ப்பு, கடையின் இடவசதி, வாடிக்கையாளர்களின் தேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பரிந்துரைகளை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடைகளின் விவரங்களை இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் இறுதியாக தேர்வு செய்யப்படும் கடைகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். தற்போது டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனுடன் பிறமாநிலங்களில் இருந்து குறைந்த அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
புதிய திட்டத்தின்கீழ் 174 வகையான மதுபானங்கள், 40 வகையான பீர் மற்றும் 4 வகையான ஒயின் ஆகியவை தமிழகத்தில் தயாரிக்கப்படும் வகைகளாகவும், மேலும் 6 வகையான மதுபானங்கள், 5 வகையான பீர் மற்றும் 5 வகையான ஒயின் ஆகியவை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வகைகளாகவும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் மட்டும் 676 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், அவற்றில் 319 கடைகள் இறக்குமதி மதுபானம் அதாவது வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.