பயணிகளுக்கு குட் நியூஸ்.. வந்தே பாரத் ரெயில்களிலும் நடப்பு முன்பதிவு திட்டம் அறிமுகம்

நடப்பு முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இனி கடைசி நேரத்திலும் பயணிகள் வந்தே பாரத் ரெயில்களில் செல்ல முடியும்.
வந்தே பாரத் ரெயில்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வேயால் இயக்கப்படும் 17 வந்தே பாரத் ரெயில்களில் நடப்பு முன்பதிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை, காலியாக இருக்கும் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்க முடியும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 17 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள இந்த ரெயில்கள் மூலம் ஆண்டுக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் வருமானமும் உயர்ந்து வருகிறது.

வந்தே பாரத் ரெயில்களில் 2024-25ம் ஆண்டில் 54 லட்சத்து 12 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூ.540 கோடியே 65 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. 2025-26ம் ஆண்டில் தெற்கு ரெயில்வேயின் 24 வந்தே பாரத் ரெயில்களில் 77 லட்சத்து 38 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.803 கோடியே 86 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

குறிப்பாக, மங்களூரு - திருவனந்தபுரம், சென்னை எழும்பூர் - நாகர்கோவில், காசர்கோடு - திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களில் இருக்கை 100 சதவீதம் நிரம்பி விடுகிறது. அந்த அளவுக்கு பயணிகள் மத்தியில் இந்த குறிப்பிட்ட ரெயில்கள் வரவேற்பை பெற்றுள்ளன. 2026-27ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் (ஏப்ரல், மே) மட்டும் இந்த ரெயில்களில் 15 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.162 கோடியே 96 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தற்போது, நடப்பு முன்பதிவு திட்டம் வந்தே பாரத் ரெயில்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், ரெயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பு வரை காலியாக இருக்கைகள் இருந்தால், அதை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இது ரெயில் புறப்படும் ரெயில் நிலையத்தில் மட்டுமல்லாது, வழிநெடுகிலும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் பொருந்தும். இதனால், கடைசி நேரத்திலும் பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் இனி செல்ல முடியும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com