பயணிகளுக்கு குட் நியூஸ்: கோடை விடுமுறைக்கு 50 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டம்

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரெயில்களில் முன்பதிவு இப்போதே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
பயணிகளுக்கு குட் நியூஸ்: கோடை விடுமுறைக்கு 50 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டம்
Published on

சென்னை,

கட்டணம் குறைவு, பயணத்தின்போது பாதுகாப்பு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதால், ரெயில் பயணத்தையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதனால், எப்போதும் தொலை தூரத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு விரைவாக முடிந்துவிடும். அதனால், விழாக்காலங்களில் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-வது வாரத்தில் பள்ளித் தேர்வுகளும் முடிந்து விடுவதால், பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

அதேபோல், இந்த ஆண்டு கூடுதலாக சட்டசபை தேர்தலும் (ஏப்ரல் 23) வருவதால், பலர் சொந்த ஊரில் வாக்களிக்க செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால், இந்த ஆண்டு கோடை காலத்தில் ரெயில்களில் கூட்டம் அதிகரிக்கும் என்று தெரிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரெயில்களில் முன்பதிவு இப்போதே முடிந்துவிட்டது. வந்தே பாரத் ரெயில்களில் மட்டுமே குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோடை காலத்தில் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளும் கோடை விடுமுறைக்கு சிறப்பு ரெயில்களை இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.

அந்த வகையில், தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், கேரளா ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் 50 சிறப்பு ரெயில்கள், 200 சர்வீஸ்களாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com