பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்: இனி வாரந்தோறும் சனிக்கிழமையும் விடுமுறை

புதிய கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக, சனிக்கிழமை விடுமுறை மற்றும் குறைக்கப்பட்ட வேலை நாட்கள் வழியே மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் கற்றல் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள்
Published on

சென்னை,

பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு நாள் காட்டியை பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்கள் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட கால அட்டவணைகளில் 220 வேலை நாட்களாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலும், பல சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கூடுதல் பணிச்சுமையை உருவாக்குவதாகக் கூறி, பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, தற்போது பள்ளி வேலை நாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 22 அரசு பொது விடுமுறை நாட்கள்:

புதிய விதிமுறைகளின்படி, வரந்தோறும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 22 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய நாள்காட்டியானது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஒரே சீராகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான தேர்வுகள் மற்றும் விடுமுறை கால அட்டவணையும் இந்த நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டின் முதலாவது இடைப்பருவத் தேர்வு ஜூலை மாத மத்தியில் தொடங்குகிறது. தொடர்ந்து, செப்டம்பர் மாத இறுதியில் காலாண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாத மத்தியில் நடைபெறும். பின்னர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து, 24 அல்லது 25-ம் தேதி கடைசி வேலை நாளாக இருக்கும். மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அறிவிக்கப்படும்.

சனிக்கிழமை விடுமுறை:

இந்த புதிய கால அட்டவணை மாற்றத்தின் காரணமாக, சனிக்கிழமை விடுமுறை மற்றும் குறைக்கப்பட்ட வேலை நாட்கள் வழியே மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் கற்றல் சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே இந்த நாள்காட்டி முறையாக வெளியிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் தங்களது பாடத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, எவ்வித பதற்றமுமின்றி நடத்தி முடிக்க இது வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com