சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி… கிளியூர் நீர்வீழ்ச்சி சீரமைக்கப்படுகிறது!

ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக ரூ.9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
கிளியூர் நீர்வீழ்ச்சி
Published on: 

சேலம்,

சுற்றுலாத்துறை சார்பில் ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சியை ரூ.78 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளியூர் நீர்வீழ்ச்சி

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏரளாமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களை மேம்படுத்தாமல் இருப்பதாகவும், அவற்றை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து ஏற்காடு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக ரூ.9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இதன் ஒருபகுதியாக ஏற்காடு படகு இல்லத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியை மேம்படுத்த ரூ.78.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த அருவி பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம், நடைப்பாதை, சுகாதார வளாகங்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

மேம்பாட்டு பணிகள்

இதுகுறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தாலும் கிளியூர் நீர் வீழ்ச்சிக்கு ஒரு சிலர் மட்டுமே செல்கிறார்கள். அங்கு மழைக்காலங்களில் மட்டும் தண்ணீர் விழும். ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இருந்து அந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழுகிறது.

நீர்வீழ்ச்சியை நெருங்கியதும் வாகனங்களை குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திவிட்டு 200 படிக்கட்டுகளில் கீழே நடந்து செல்ல வேண்டும். குறிப்பாக வயதானவர்கள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும். இருப்பினும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நீர்வீழ்ச்சி பகுதியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன, என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com