

சென்னை
தமிழகம் முழுதும் அரசு பஸ் இயக்கம் இல்லாத, அல்லது முன்பு இயக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட வழித்தடங்கள் குறித்த விபரங்களை, கோட்டம் வாரியாக சேகரித்து, அறிக்கை அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டாலும், சில கிராமங்களுக்கு இன்னும் அரசு பஸ் வசதி இல்லை. சில வழித்தடங்களில் காலை, மாலை அல்லது இரவில் ஒரு சுற்று மட்டுமே பஸ் இயக்கப்படுவதாகவும், வார விடுமுறை நாட்களில் டவுன் பஸ் சேவை குறைவதாகவும் பயணியர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் புதிய பஸ்களை இயக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இதுவரை பஸ் செல்லாத மற்றும் இயக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பஸ் சேவையை தொடங்க அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக, கோட்டம் அளவில் அறிக்கை தயாரித்து அனுப்பும்படி, மேலாண்மை இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ் வசதி இல்லாத கிராமங்கள் மற்றும் வழித்தடங்கள் தொடர்பான விபரங்கள், வட்டார போக்குவரத்துத் துறை மூலம் சேகரிக்கப்பட்டு, கலெக்டர்கள் வழியாக அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. புதிய வழித்தடங்களில் பஸ் சேவை தொடங்கினால், மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், மாநிலம் முழுதும் தற்போது விரிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என்றனர்.