மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்


மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
x

டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை

அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று மாலை முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் ஏழுமலை என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் பேருந்து பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே மெட்ரோ ரெயில் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரெயில் பாலத்தின் தூணில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தின் முன்பக்கம் முழுவதுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் டிரைவர் ஏழுமலை பலத்த காயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வெயிலின் தாக்கம் காரணமாக போரூர் அருகே வந்து கொண்டிருந்தபோதே டிரைவருக்கு லேசான மயக்கம் வருவது போல இருப்பதாக கண்டக்டரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் பூந்தமல்லி அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story