

குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் சாணார்பட்டியை சேர்ந்தவர் ரகமத்தலி. இவரது மகன் முகமது யாசின் கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்
இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக சாணார்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார். அரசு பஸ்சை திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் கூட்டமாக இருந்ததால் டிரைவர் சங்கர் மாணவர்களை தகாத வார்த்தைகளை கூறி குச்சியால் தாக்கியதாக கூறுப்படுகின்றது.
இதில் மாணவன் முகமது யாசின் காயமடைந்தார்.உடனே அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு சிகிச்சைக்காக கொசவபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே அரசு பஸ் டிரைவர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் ஒன்றிணைந்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாணவர்கள் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.