அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்ற அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் பணியிடை நீக்கம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடத்துனர் மற்றும் டிரைவர் உள்பட 11 பேர் 2 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்ற அரசு பஸ் டிரைவர்கள்- கண்டக்டர்கள் பணியிடை நீக்கம்
Published on

கோவை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் நடத்துனர்கள் மற்றும் டிரைவர்கள் அரசியல் கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்களில் உறுப்பினராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் இருந்து வருகிறார்கள்.

தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்திற்காக அண்மையில் கோவை கொடிசியாவுக்கு வந்திருந்தார். அப்போது அங்கு விதிகளை மீறி சென்றவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் கூறியதாவது:- அரசு ஊழியர் எந்தவொரு அரசியல் கட்சியிலும், அமைப்பிலும் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவே இருக்கக்கூடாது. எந்தவொரு வேட்பாளருக்கும் தேர்தல் முகவராகவோ, வாக்கு எண்ணும் முகவராகவோ செயல்படக்கூடாது.

எந்தவொரு அரசியல் கட்சி சார்புடையவராக காட்டிக் கொள்ளக்கூடாது. பஸ்களிலோ, தங்களுடைய உடமைகளிலோ அரசியல் கட்சி தொடர்பான சின்னங்கள், கொடிகள் மற்றும் இதர இலச்சினைகளை வெளிப்படையாக வைத்திருக்க கூடாது என்பன உள்பட பல்வேறு விஷயங்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.அதன்படி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடத்துனர் மற்றும் டிரைவர் உள்பட 11 பேர் 2 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், தொழிற்சங்கத்தில் இருப்பதால் வேட்பாளர்களை சந்தித்து கோரிக்கை வைப்பது என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறோம். அதற்காக கோவை மாவட்டத்தில் 11 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த நடவடிக்கை எங்களை மேலும் அதிருப்தி அடைய செய்துள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com