மீஞ்சூர் அருகே சாலையோர பள்ளத்தில் தொங்கிய அரசு பஸ்

சாலையில் சென்றபோது சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரை தாண்டி பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் இறங்கி அந்தரத்தில் தொங்கியது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பணிமனையில் இருந்து தடம் எண் டி 40 என்ற அரசு பஸ் மீஞ்சூர், காட்டூர், தந்தைமஞ்சி வழியாக சென்று மீண்டும் பொன்னேரியை வந்தடையும். நேற்று காலை 10 மணி அளவில் வழக்கம்போல பொன்னேரில் இருந்து புறப்பட்ட இந்த பஸ் காட்டூரை அடுத்த தந்தைமஞ்சி கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 4 பயணிகள் இருந்தனர்.
மீஞ்சூர்- காட்டூர் நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரை தாண்டி பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் இறங்கி அந்தரத்தில் தொங்கியது.
உடனே 4 பயணிகள் மற்றும் கண்டக்டர் பதறியடித்து பஸ்சின் பின்புறம் வழியாக இறங்கினர். பின்னர் டிரைவர் பஸ்சில் இருந்து லாவகமாக இறங்கி உயிர் தப்பினார். பஸ் 10 அடி உயரமுள்ள தடுப்புச் சுவரில் வயலில் விழாமல் அந்தரத்தில் தொங்கியது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காட்டூர் போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததாலும், நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஈரமாகவும் இருந்ததே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






