அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு


அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 22 May 2025 8:25 AM IST (Updated: 22 May 2025 1:17 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சும்- வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

தஞ்சாவூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு பகுதியை சேர்ந்த 11 பேர் ஒரு வேனில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து கொண்டு இருந்தனர். அதேநேரத்தில் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி மேம்பாலம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வந்ததால் ஒருபுறம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மற்றொரு வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு வழிப்பாதையில் வந்தபோது வேனும், அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

உடனே வேனில் இருந்தவர்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அய்யோ... அம்மா... என்று அலறினார்கள். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். மேலும் விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.

அப்போது வேனில் வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் வேனில் வந்த 7 பேரும், பஸ்சில் வந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் வேனில் வந்தவர்களில் காயம் அடைந்த ஆண் ஒருவர், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காயம் அடைந்த 8 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களின் உடல்களும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தஞ்சாவூர் அருகே அரசு பஸ் - வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 More update

Next Story