அரசுப் பேருந்துகளை தரத்துடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜிகே வாசன்


அரசுப் பேருந்துகளை தரத்துடன் இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜிகே வாசன்
x
தினத்தந்தி 27 Jun 2025 2:07 PM IST (Updated: 27 Jun 2025 2:08 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து விதமான வாகனங்களின் தரத்தையும் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்

சென்னை ,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழக அரசு, மாநிலத்தில் போக்குவரத்தில் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்ய முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.காரணம், தமிழ்நாட்டில் போக்குவரத்தில் வாகன விபத்தினால் குழந்தைகள், சிறுமிகள், மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், முதியோர் என ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இச்சூழலில் மாநிலத்தில் உள்ள இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் தரத்தையும் தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்.

வாகனத்தை இயக்குபவர் சாலை விதிகளுக்கு உட்பட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறாரா என்பதை தொடர் சோதனை மூலம் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்தில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு கவனமாக பயணிப்பதும், வேகத்தைக் கட்டுப்படுத்துவதும், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருப்பதும் மற்றும் மொபைல் போன் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் மிக மிக அவசியம்.

விபத்து ஏற்படுத்தி, உயிரிழப்பு நிகழ்ந்தால் தவறு செய்த ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும், அந்த வாகனத்தை இயக்கக்கூடாது எனவும் விதிகள் கொண்டுவரப்பட வேண்டும்.

கிராமப் பகுதி முதல் மாநகராட்சிப் பகுதி வரை அனைத்து இடங்களிலும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மேலும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை பொது இடங்களில், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என எந்த

வாகனமாக இருந்தாலும் சாலை விதிகளுக்கும், போக்குவரத்து விதிகளுக்கும் உட்பட்டு இயக்கப்பட வேண்டும் என்பதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொது மக்களும் கவனமாக செல்ல வேண்டும்.

குறிப்பாக வாகனத்தை இயக்குவதற்கும், போக்குவரத்திற்கும் சரியான சாலை வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். மேலும் போக்குவரத்துக்கான விதிகளில் சமரசம் இல்லாமல், லஞ்சத்திற்கு இடம் இல்லாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மிக முக்கியமாக தமிழக அரசு அரசுப் பேருந்துகளை தரத்துடன் இயக்கி, தொடர்ந்து பராமரித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

எனவே தமிழக அரசு, மாநிலம் முழுவதும் வாகனங்கள் பாதுகாப்பாக இயக்கப்பட நல்ல சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவும், விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story