அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக குறிஞ்சி சிவகுமார் பொறுப்பு ஏற்றார்

அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக குறிஞ்சி சிவகுமார் பொறுப்பு ஏற்றார். ஓ.டி.டி. தளங்கள், அரசு கேபிள் டி.வி. மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக குறிஞ்சி சிவகுமார் பொறுப்பு ஏற்றார்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கடந்த 4-10-2007 அன்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால், தமிழகத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், நிறைந்த சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிறுவனம் அரசின் பல்வேறு சேவைகளை எளிய முறையில் பொதுமக்கள் பெற்றிட அரசு இ-சேவை மையங்களை நிறுவி அதன் மூலம் இணையச் சேவைகளையும் வழங்கி வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 12.03.2021 முதல் காலியாக உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு குறிஞ்சி சிவகுமாரை நியமித்து கடந்த 6-ந்தேதி ஆணையிட்டார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள குறிஞ்சி என்.சிவகுமார், மு.க.ஸ்டாலினையும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து குறிஞ்சி சிவகுமார் நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி வெளிப்படைத்தன்மையோடு தமிழக அரசை நடத்துவதுபோல, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் வெளிப்படைத்தன்மையோடு செயல்படும். மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மக்களுக்கு குறைந்த செலவில், எளிய முறையில் சேவைகளை வழங்கும். ஓ.டி.டி. தளங்களை அரசு கேபிள் டி.வி. மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதனைத்தொடர்ந்து, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக குறிஞ்சி சிவகுமார் நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன மேலாண்மை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொது மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com