அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் - கோரிக்கைகளை நிறைவேற்றுக - டிடிவி தினகரன்

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் -  கோரிக்கைகளை நிறைவேற்றுக - டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு வழங்கக் கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வர வேண்டும்.

12 மாத ஊதியம், ஓய்வூதியம், மகப்பேறு விடுப்பு, 25லட்ச ரூபாய் பணிக்கொடை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57,700 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியிருக்கும் நிலையில், அதில் பாதியளவு கூட வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அதிகாரப்போக்கே, பாடம் கற்பிக்கும் பணியைப் புறக்கணித்துப் போராடும் அளவிற்கான நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கவுரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களும் பயனளிக்காத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க வேறுவழியின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கவுரவ விரிவுரையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com