மருத்துவக் கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி: அரசு டாக்டர் கைது

சக்தி கணபதியின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது 2 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர்.
கைது
Published on: 

போரூர்,

மருத்துவக் கல்லூரியில் 'சீட்' வாங்கித் தருவதாக ரூ.60 லட் சம் மோசடி செய்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவக் கல்லூரி

சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் சக்தி கணபதி (வயது 40). இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும், போரூர் பகுதியில் மருத்துவத் துறையில் வேலை வாங்கித் தருவது மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெற்று தருவது தொடர்பான அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணியின்போது அந்த அலுவலகம் இடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் தனது மகனுக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடம் பெற்றுத் தருவதற்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்.

கைது

அப்போது, மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக சக்தி கணபதி கூறியதையடுத்து, கடந்த ஆண்டு அவரிடம் பிரபாகரன் ரூ.60 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்று தரவில்லை. இதுகுறித்து பிரபாகரன் கேட்டபோது. சக்தி கணபதி உரிய பதில் அளிக்காமல் ரூ.10 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.50 லட்சத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பிரபாகரன் அளித்த புகாரின்பேரில் போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி கணபதியை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் பலரிடமும் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றது தெரியவந்தது. மேலும், சக்தி கணபதியின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது 2 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட சக்தி கணபதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com