

சென்னை,
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள்பிள்ளை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தங்கள் உயிர்களையும் பொருட்படுத்தாமல் அரசு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்றால் மருத்துவர்கள் உயிரிழந்தபோதும், தன்னலமின்றி தொடர்ந்து அரசு டாக்டர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறோம்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மிகுந்த உயரத்தை அடைந்துள்ளது. இருப்பினும் அரசு டாக்டர்களுக்கு மற்ற மாநிலங்களைவிட மிக குறைவான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது வருத்தம் அளிக்கிறது. அரசு டாக்டர்களுக்கு 4-ம் ஊதியப்பட்டை அளவுக்கு அதிகரிக்க ரூ.300 கோடியே தேவைப்படுகிறது.
தர்ணா போராட்டம்
தமிழகத்தில் தற்போது ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அரசு டாக்டர்களுக்கு உரிய ஊதியத்தை தருவதற்கு கூட அரசு மறுத்து வருவது தான் வேதனையை தருகிறது. தொடர்ந்து அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வுக்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த போராட்டத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவில்லை.
இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊதிய உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 19-ந் தேதி தர்ணா போராட்டமும், தொடந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.