அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை

கோப்புப்படம்
அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசாணை எண் 354 நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மருத்துவ உட்கட்டமைப்புகள், போதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன. இவற்றை வலியுறுத்தி, பல்வேறு அறப்போராட்டங்களில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்ட பிறகும், அவர்கள் குரலுக்கு தி.மு.க. அரசு செவிசாய்க்கவில்லை.
தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன், மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அரசின் தொடர் புறக்கணிப்பால் விரக்தி அடைந்துள்ள மருத்துவர்கள், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்தை ஈர்க்க, இன்று, மேட்டூரிலிருந்து சென்னை வரை, பாதயாத்திரை போராட்டம் தொடங்கியுள்ளனர்.
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும், தன்னலமின்றி பணியாற்றிய அரசு மருத்துவர்களை, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்னும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது, துரதிருஷ்டவசமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உடனடியாக, அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.