அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி

அரசு ஊழியர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் உறுதி
Published on

கரூர்,

ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று வட்டார அளவில், தாலுகா அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பாக நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈசநத்தம் என்ற இடத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சின்னதாராபுரம் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன்பாக ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்ததை பார்த்ததும் ஸ்டாலின் தனது காரில் இருந்து இறங்கி ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு சென்றார். அப்போது ஸ்டாலினை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனைதொடர்ந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்தியில் பேசியதாவது:-
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்று வாழ்த்தி பேசி இருக்கிறேன். சட்டசபையிலும், விவசாயிகள் பிரச்சினை, நெசவாளர் பிரச்சினை பற்றி பேசியபோது ஆசிரியர், அரசு ஊழியர்களான உங்களது போராட்டத்தில் உள்ள நியாயங்களையும் எடுத்து கூறினேன். ஆனால் அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆயிரக்கணக்கான போராட்டத்தில் இதுவும் ஒன்று என்கிற வகையில் பதில் அளித்தார்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும். நாங்கள் நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில் கூட உங்களது பிரச்சினைகள் பற்றி பேசி இருக்கிறேன். உங்களது கோரிக்கைகள் இந்த ஆட்சியில் தீர்த்து வைக்கப்படவில்லை என்றால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com