அரசுக்கு எதிராக புத்தகம் எழுத அரசு ஊழியர்களுக்கு தடை

அரசு ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக புத்தகம் எழுத தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
அரசு ஊழியர்கள் புத்தகம் எழுதுவது, வெளியிடுவது தொடர்பான திருத்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன்படி ஒவ்வொரு அரசு ஊழியரும் எந்தவொரு புத்தகத்தையும் வெளியிடுவதற்கு முன் அனுமதி பெறவேண்டும்.
இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியம் பெறும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திருத்தத்தின்படி, அரசு ஊழியர்கள் எழுதும் புத்தகத்தில் அரசுக்கு எதிரான எந்த விமர்சனமும் இல்லை என்றும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் ஆட்சேபனைக்குரிய உரை இல்லை என்றும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியம் அல்லது ராயல்டி பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






