8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சாலையில் படுத்து அரசு ஊழியர்கள் போராட்டம்; போலீசார் தடியடி

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் படுத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் லேசாக தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காட்சி
கோட்டையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த காட்சி
Published on

8 அம்ச கோரிக்கை

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதியத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு துறைகளில் உள்ள 4 லட்சம் காலி பணி இடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். ஊதிய மாற்றத்தின் மூலம் வழங்கப்பட வேண்டிய 21 மாத நிலுவைத்தொகையை வழங்கவேண்டும். சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை

திட்டத்தை கைவிடவேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பெருந்திரள் முறையீடு இயக்கம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு மற்றும் பிரசார இயக்கம் நடந்தது. தொடர்ந்து கடந்த 2-ந் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டமும், சிறை நிரப்பும் போராட்டமும் நடந்தது. 8 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பெருந்திரள்

முறையீடுஇயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

இதையடுத்து நேற்று காலை முதலே சென்னை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சாரை, சாரையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி படையெடுத்த வண்ணம் இருந்தனர். குறிப்பிட்ட சில நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும், அரசு ஊழியர்களின் தலைகளாகவே காட்சியளித்தது. பெருந்திரள் முறையீடு இயக்கத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் மு.பாஸ்கரன், பொதுச்செயலாளர் ஆ.செல்வம் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பிற்பகல் 2 மணி வரையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தப்படி அனுமதி கிடைக்கவில்லை. இது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.

போலீசார் தடியடி

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் முன்னோக்கி செல்ல முடியாதவாறு, போலீசார் நாலாபுறமும் தடுப்பு வேலி அமைத்திருந்தனர். அந்த தடுப்பு வேலியை தூக்கி எறிந்துவிட்டு, அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகம் நோக்கி முன்னோக்கி சென்றனர். கூச்சலும், குழப்பமும் நிலவியதால் சேப்பாக்கம் பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. காட்டாற்று வெள்ளம்போல முன்னேறி சென்றவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போலீசாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை. போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசாக தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அதுவும் பலனற்று போனது.

தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலைக்கு அரசு ஊழியர்கள் சென்றனர். அவர்கள் கோஷம் எழுப்பியவாறு தலைமைச் செயலகம் நோக்கி சென்றவாறு இருந்தனர். போலீசார் அமைத்த இரும்பு தடுப்புகளையும் மீறி போர் நினைவுச்சின்னம் வரையிலும் முன்னோக்கி சென்றனர். இதனால் கலங்கரை விளக்கத்தில் இருந்து சென்டிரல், சென்னை கடற்கரை, ஐகோர்ட்டு வழியாக செல்ல முயன்ற வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. இதனால் காமராஜர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலையில் படுத்து போராட்டம்

சுமார் ஒரு மணி நேரம் இந்த போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதையடுத்து ஒருவழியாக போர் நினைவுச்சின்னம் அருகே அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தலைமைச் செயலகம் நோக்கி முன்னேறி செல்ல முயன்ற அரசு ஊழியர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினார்கள்.

போலீசாரிடம் இருந்து தப்பிக்க அரசு ஊழியர்கள் சிலர் சாலையில் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை வரையிலும் விடுதலை செய்யப்படவில்லை. அதேநேரத்தில் சேப்பாக்கத்தில் திரண்டிருந்த அரசு ஊழியர்கள், தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டத்தின் வடிவத்தை மாற்றி நேற்று மாலை வரை காத்திருப்பு போராட்டமாக தொடர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்களின் போராட்டத்தை அடக்குமுறையை கையாண்டு ஒடுக்க நினைப்பது சற்றும் பொருத்தமல்ல. 3-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடியடி நடத்தியதில் பெண் ஊழியர் உள்பட 7 பேர் காயம் அடைந்து, ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பலர் காயம் அடைந்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போராடும் அரசு ஊழியர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com