தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் கடந்து, பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம், நிலுவைத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்க கோரி இன்று இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.1.2021 அன்று வெளியிடப்பட்டது. இந்த அரசாணையின்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையோடு வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றிடும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகளை கடந்த பின்பும் பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையில் ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சங்க பொறுப்பாளர்களிடம் உயர் கல்வித்துறை அமைச்சர், ஜனவரி மாத ஊதியத்தில் சேர்க்கப்படும் என உறுதி அளித்த நிலையில் ஜனவரி மாதம் 20-ம் தேதியைக் கடந்த பின்பும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நேற்று தொடங்கி, இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.
இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மூட்டா அமைப்பின் சார்பில் மாநில, மண்டல மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கின்ற இந்த காலகட்டத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டும், தமிழக முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுத்திடக் கோரியும் கல்லூரிகளில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.






