அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் அரசு மருத்துவமனைகள் - நயினார் நாகேந்திரன்

டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த கொடூரம், நிர்வாகத் தோல்விக்கான சான்று என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் அரசு மருத்துவமனைகள் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் மின்சாரம் தடைபட்ட காரணத்தால், மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த கொடூரம், திமுக அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்விக்கான சான்று.

தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இப்படி மின்சாரம் இல்லாமல் கற்காலம் போன்று சிகிச்சை அளிப்பதற்கா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மருத்துவத்துறைக்குக் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது? ஐந்தறிவு கொண்ட அணிலின் மீது அவ்வளவு அக்கறை காட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன்னை நம்பி வாக்களித்த பொதுமக்களின் உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தொடர்ந்து அலட்சியப்படுத்துவது ஏன்?

ஏழை, எளிய மக்களின் புகலிடமாக விளங்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசுப் பள்ளிகளை எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி முடக்கிவிட்டு, விதவிதமான பெயர்களில் விளம்பர விழா எடுக்கும் திமுக அரசின் ஈயம் பூசும் வேலையைத் தமிழக மக்கள் இனி துளியும் நம்பமாட்டார்கள். மக்களிடம் வரியை மட்டும் கறாராக வசூலித்துக் கொண்டு அவர்களின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாத திமுக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com