கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா: அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்பு

இந்த ஆண்டில் சாதனை படைக்கும் விதமாக 40 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்
சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிண்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இன்று (04.10.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 132 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும், 311 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இதில் வருடந்தோறும் 50,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இத்தொழிற் பயிற்சி நிலையங்களுக்கான தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து அகில இந்திய அளவில் ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 27,480 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும் மற்றும் 19,280 தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும் ஆக மொத்தம் 46,760 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அதில் 26,447 (96.24%) அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், 16,621 (86.21%) தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவியரும், ஆக மொத்தம் 43,068 (92.10%) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 96% மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் 04.09.2025 அன்று அறிவிக்கப்பட்டு தற்போது அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
தற்போது வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 305 மாணவ மாணவியரும், கிண்டி (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 125 மாணவியரும் மற்றும் திருவான்மியூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 75 மாணவ மாணவியரும் ஆக மொத்தம் 505 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தேசிய தொழிற் சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது.
மேலும், பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டதால் இந்த ஆண்டில் சாதனை படைக்கும் விதமாக 40 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்’ என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கூடுதல் இயக்குநர்கள் தி.ராஜசேகர், இரா.மகேஸ்வரன், வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் (சென்னை) ஆர்.பிரபாகரன், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






