கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைச்சர்கள் எவவேலு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைச்சர்கள் எ.வ.வேலு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைச்சர்கள் எவவேலு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்
Published on

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, குடியிருப்புகள் கட்ட ரூ.398 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து கல்லூரி கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி வளாகத்தில் 6 மாடி மற்றும் பல்வேறு வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டா ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் உஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனை மற்றும் குடியிருப்புக்கான கல்வெட்டை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து 10 பேருக்கு புறநோயாளிகள் சீட்டு வழங்கி மருத்துவ சேவையை தொடங்கி வைத்த அவர்கள், அவசர சிகிச்சை பிரிவை பார்வையிட்டனர். பின்னர் மாணவர்கள் கல்லை கனலி என்ற தமிழ் மன்றத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

துணை சுகாதார நிலையம்

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர், செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் தலா ரூ.6 கோடி மதிப்பில் ரூ.24 கோடியில் மருந்து கிடங்குகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர். மேலும் தொட்டியம் கிராமத்தில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட செவிலியர் கட்டிடம், மாடூர், புக்கிரவாரி கிராமங்களில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தையும் அமைச்சர் எ.வ.வேலு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன், ஒன்றிய குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், ஒன்றியக்குழு துணை தலைவர் விமலா முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சுந்தரம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, நகர மன்ற தலைவர் சுப்புராயலு, ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், டாக்டர்கள் பழமலை, பொன்னரசு மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com