புதுக்கோட்டையில் அரசு இசைப்பள்ளி கட்ட அடிக்கல்: அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் அருங்காட்சியகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
புதுக்கோட்டையில் அரசு இசைப்பள்ளி கட்ட அடிக்கல்: அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் அருங்காட்சியகம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Published on

சென்னை,

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் 54 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதை உயிரிப்படிவ அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ரூ.1 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நுழைவுச் சீட்டு விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அருங்காட்சியக வெளியீடுகள் விற்குமிடம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள காணொலி விளக்க கூடம், கலை பண்பாட்டுத்துறையின் கீழ், திருவண்ணாமலை சமுத்திரம் கிராமத்தில் 424.44 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அரசு இசைப்பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிக்கு ரூ.2 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கருங்கல்லிலான சுற்றுச்சுவர், மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம், 2 தொழிற்பயிற்சி கூடங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு 314 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி மூலம் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 43 இருக்கைகளுடன் கூடிய புதிய வோல்வோ குளிர்சாதன சொகுசு பஸ் சேவையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில் திருக்கோவிலூரில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வரி அலுவலக கட்டிடம், கீழ்பென்னாத்தூரில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தையும் திறந்துவைத்தார். பதிவுத்துறையில் நகர்ப்புற பகுதிகளில் ஆவணப்பதிவு செய்தவுடன் பட்டா மாறுதலுக்கான படிவங்களை கணினி மூலம் மாற்றம் செய்யும் ஸ்டார் 2.0 மென்பொருள் விரிவாக்கத் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com