போக்குவரத்து கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே அரசு நியமிக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி

போக்குவரத்து கழகத்தில் வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவது தமிழக மக்களுக்கு எதிரானதாகும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மு.வீரபாண்டியன்
கோப்புப்படம்
Published on

சென்னை,

போக்குவரத்து கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே நடத்துனர்களாகவும், ஓட்டுநர்களாகவும், நிரந்தர அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 1,800 நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தனியார் நிறுவனம், வடமாநிலத்தவர்களை நடத்துநர்களாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நியமித்துள்ளது. இது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையில்லா திண்டாட்டத்தில் வாடும் பொழுது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், வேறு மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்குவது தமிழக மக்களுக்கு எதிரானதாகும். இத்தகைய முயற்சியை சென்னை மாநகர போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு அரசும் கைவிட வேண்டும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களையே, நடத்துனர்களாகவும், ஓட்டுநர்களாகவும், நிரந்தர அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றக்கூடிய நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com