கர்நாடக அரசை தி.மு.க. தட்டிக்கேட்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லையென்றால் கர்நாடக அரசை தி.மு.க. தட்டிகேட்க வேண்டும் என்று கோவையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது.
கர்நாடக அரசை தி.மு.க. தட்டிக்கேட்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
Published on

கோவை,

கடந்த 50 ஆண்டுகளாக எந்த அரசாலும் தீர்க்கப்படாத காவிரி நதிநீர் ஆணையத்தை உருவாக்கி அதற்கான அரசாணையை அரசிதழில் பதிவு செய்து சட்ட பூர்வமாக்கியிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. கர்நாடகத்தில் இருக்கிற காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள அரசாங்கம் இதை அப்படியே ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு தரவேண்டிய நீரை தரவேண்டும்.

வருங்காலத்தில் இதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை தீர்க்கக்கூடிய முதல் கட்சியாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இருக்க வேண்டும். காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லையென்றால் அதை தி.மு.க. தட்டி கேட்க வேண்டும்.

காரணம் அவர்களின் கூட்டணி அரசாங்கம் தான் அங்கு நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் ஏமாற்றி வந்தது போன்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இனியும் ஏமாற்றக்கூடாது.

தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபற்றி கேள்வி கேளுங்கள் என்று ஓட்டு போட்டு மக்கள் சட்டமன்றத்துக்கு அனுப்பினால் தி.மு.க.வினர் மாதிரி சட்டசபை கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஏமாற்று வேலை.

எஸ்.வி.சேகர் பிரச்சினையில் சட்டம் தனது கடமையை செய்யும். வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது பிரச்சினையில் ஒருவருடைய நடவடிக்கைகள் தேசவிரோத அளவுக்கு இருக்கிறது என்று கருதினால் வழக்கு தொடர்ந்திருப்பார்கள். தமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகள் வந்து விடக்கூடாது. வேலையற்ற நிலைமை தமிழகத்தில் இருக்கவேண்டும். தனித்தமிழ்நாடு போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள். அதை தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து கட்சி ஒரு குழு அமைத்துள்ளது. அந்த சம்பவத்தில் இறந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மூலம் பிரதமர் மனவேதனையோடு இரங்கல் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com