

சென்னை,
தமிழக வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சுமார் 1.8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பருத்திக்கு குவிண்டாலுக்கு ரூ.5,500-ம், ஏக்கருக்கு ரூ.70,000-ம் என நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் அதிக அக்கறை காட்டினர். இதன்காரணமாக 2007-2008-ம் ஆண்டு 99 ஆயிரம் ஹெக்டேர் என இருந்த பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு 2019-2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 69 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவாக உயர்ந்தது.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாடு பருத்தி சாகுபடி மிஷன் எனப்படும் மாநில நிதி உதவி திட்டத்தின் கீழ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால், பஞ்சு உற்பத்தி தமிழகத்தில் ஒரு ஹெக்டேருக்கு 343 முதல் 412 கிலோ வரை உயர்ந்தது.
பருத்தி விளைச்சலை அதிகரிப்பதற்கு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் மாநில அரசு உதவி வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அதிக அளவில் பருத்தி பயிரிட்டனர்.
கடந்த ஆண்டுகளில் பருத்தி மகசூல் ஹெக்டேருக்கு 15 குவிண்டால் என இருந்தது. அது, இந்த ஆண்டு 22 குவிண்டால் வரை உயர்ந்து உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அனைத்து பருத்தி ஆலைகளும் மூடப்பட்டு இருந்தன. இதன்பின்பு, குறைந்த தொழிலாளர்களுடன் செயல்பட்டன. இதன்காரணமாக வர்த்தகர்கள் பருத்தியை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகளுக்கு, பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை மட்டுமே கிடைத்தது. பருத்தி விவசாயிகள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பருத்திக்கு நியாயமான விலை கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் நடத்தப்படும் ஏலத்தில் இந்திய பருத்தி கழகம் கலந்து கொள்வதன் மூலம் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்தால், இந்திய பருத்தி கழகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,550 என குறைந்தபட்ச ஆதார விலையில் கடந்த மாதம் முதல் பருத்தியை வாங்க தொடங்கி உள்ளது.
இதன்காரணமாக, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 40 சதவீத பருத்தி இந்திய பருத்தி கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய பருத்தி கழகம் கொள்முதலில் ஈடுபட்டதால் தனியார் வர்த்தகர்களும் ஏலத்தில் பங்கேற்று மீதமுள்ள 60 சதவீத பருத்தியை நியாயமான விலைக்கு வாங்க தொடங்கினர்.
மாநில அரசு எடுத்த இந்த முயற்சியின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து பருத்தி விவசாயிகளும் உற்பத்தி செய்த பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொண்டு வந்து ஊரடங்கு காலத்தில் பருத்திக்கான நியாயமான விலையை பெற்றுள்ளனர்.
மாநில அரசின் தீவிர நடவடிக்கையால் 25.7.2020 வரை மொத்தம், 15,629 டன் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வந்துள்ளன. இது 2019-2020-ம் ஆண்டில் 7,636 டன்னாகவும், 2018- 2019-ம் ஆண்டில் 5,621 டன்னாகவும், 2017-2018-ம் ஆண்டில் 5,473 டன்னாகவும் இருந்தது.
டெல்டா மாவட்டங்களில் பருத்தி அறுவடை இன்னும் நடைபெற்று வருவதால், ஆகஸ்டு இறுதி வரை பருத்தி கொள்முதல் தொடர மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பருத்தி விவசாயிகளுக்கான பணத்தை வழங்கவும், விரைவுபடுத்தவும், கொள்முதல் செய்த பருத்தியை குறுகிய காலத்தில் எடுத்துச்செல்லவும் இந்திய பருத்தி கழகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.