ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 16 பேரூராட்சிகள் மற்றும் 132 கிராமங்களுக்கு ஓர் முக்கிய மருத்துவ மையமாக திகழ்கிறது. 53 படுக்கைகளுடன் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனை, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சை பிரிவுகள், குழந்தைகள் நல பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தொற்று நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகளை கொண்டு பல்வேறு மருத்துவச் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

சென்னை-வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் (NH-48) அமைந்துள்ள இந்த மருத்துவமனை சாலை விபத்தினால் (RTA) பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்நாடியாக விளங்குவதுடன் உடனடி அவசர சிகிச்சை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், குறிப்பிடத்தக்க வகையில் இம்மருத்துவமனையில் சராசரியாக 838 வெளி நோயாளிகள் மற்றும் 51 உள்நோயாளிகள் நாள் தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றியமையாத மருத்துவ சேவைகள் புரியும் இந்த மருத்துவமனையை வலுப்படுத்த வேண்டிய தேவையின் அவசியத்தை அறிந்து, உலக வங்கியின் நிதியுதவியுடன் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து, இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக இன்று தமிழ்நாடு அரசு, 3.22 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி கீழ்கண்ட பணிகளை மேற்கொள்வதற்குஆணை பிறப்பித்துள்ளது:-

டயாலிசிஸ் எந்திரத்தை நிறுவுதல்

சிடி ஸ்கேன் கருவியை வழங்குதல்

சிடி ஸ்கேன் கருவியை நிறுவுவதற்கு தேவையான கட்டிடம் மற்றும் மின்னிணைப்பு பணிகள்.

உயர்தர மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக, இம்மருத்துவமனையின் திறனை விரிவுபடுத்துவதும், அத்தியாவசிய தேவைகளுக்குநோயாளிகள் பிற அரசு மருத்துவமனைகளை சார்ந்திருப்பதை குறைப்பதும் இம்மேம்பாட்டின் நோக்கமாகும்.

இம்முயற்சியானது, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களுக்கு மேம்பட்ட மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com