வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம் 

வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

மதுரையை சேர்ந்த கலாநிதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழ்நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க, பிற மத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய மத நிறுவனங்கள் நிறுவப்படக்கூடாது என்று நீதிபதி வேணுகோபால் ஆணையம் பரிந்துரைத்தது. அதன் பேரில் மாவட்ட, நகராட்சி கட்டிட விதிகள் சட்டங்களின்படி, பொது வழிபாடு அல்லது மத நோக்கங்களுக்காக கட்டிடங்களை கட்டுவதற்கு மாவட்ட கலெக்டரின் முன் ஒப்புதல் கட்டாயமாக தேவைப்பட்டது.

அத்தகைய கட்டுமானம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் அனுமதி மறுக்க கலெக்டருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்து உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் மதம் சார்ந்த கட்டிடங்களுக்கு மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் இன்றி, திட்ட அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை ஏற்கனவே உள்ள விதிகளுக்கு எதிரானது.

எனவே வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்று தேவையில்லை என விலக்கு அளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கண்ட அரசாணைக்கு தடை விதித்தும், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

1 More update

Next Story