

தக்கலை,
தக்கலை அருகே அரசு பள்ளியில் பூட்டை உடைத்து கையடக்க கணினிகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
தக்கலை அருகே உள்ள மூலச்சலில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளியும் செயப்பட்டு வருகிறது. கடந்த 25-ந் தேதி மாலையில் வகுப்புகள் முடிந்த பிறகு தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அலுவலக அறையை பூட்டி விட்டு சென்றார்.
இதையடுத்து நேற்று காலையில் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக துப்புரவு பணியாளர் பள்ளிக்கு வந்தார். அப்போது தலைமை ஆசிரியரின் அறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே, தலைமை ஆசிரியர் லாரன்ஸ் விரைந்து வந்து அறையின் உள்ளே சென்று பார்த்தபோது மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பதற்கு பயன்படுத்தும் 3 கையடக்க கணினிகள் (டேப்லெட்) திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் அலுவலக அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கையடக்க கணினிகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.