அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை கடந்தது - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
தமிழக பள்ளிக்கல்வித்துறையின்கீழ் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் பலர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக 4 லட்சம் மாணவ-மாணவியர் சேர்ந்துள்ளனர். கேவி வகுப்புகளில் 32,807 மாணவ-மாணவியர், தமிழ் வழி 1ம் வகுப்பில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 563 மாணவ-மாணவியர், ஆங்கில வழி 1ம் வகுப்பில் 63 ஆயிரத்து 896 மாணவ-மாணவியர், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 92 ஆயிரத்து 98 மாணவ-மாணவியர் என மொத்தம் 4 லட்சத்து 364 மாணவ-மாணவியர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அரசு பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சம்! ஆயிரம் முத்தங்களுடன் மாணவச்செல்வங்களை வரவேற்கிறோம். "அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்" என தெரிவித்துள்ளார்.






