அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி: டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி: டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சாம்சன் பாலிமர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

2018-19-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணிகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை, கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் வெளியிட்டது.

ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் எங்கள் நிறுவனம் உள்ளிட்ட 14 நிறுவனங்கள் பங்கேற்றது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் காலணி தயாரிப்புகளை சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து தொழில்நுட்ப ரீதியாக சான்றளித்தால் மட்டுமே டெண்டர் இறுதியாகும்.

டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களையும் தமிழக அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். எங்களது நிறுவனத்தை தவிர்த்து, வேறு சில நிறுவனங்களை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாடு டெண்டர்களுக்கான வெளிப்படைத்தன்மை சட்டம் மற்றும் விதிகளின்படி டெண்டர் வெளிப்படையாக நடைபெறவில்லை. எனவே, இந்த டெண்டரில் எங்களது நிறுவனத்தையும் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனும், அரசு மற்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் கூடுதல் அட்வ கேட் ஜெனரல் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, எம்.சி.முனுசாமி மற்றும் மூத்த வக்கீல்கள் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சதீஷ் பராசரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாதாடினர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் மனுதாரர் சுத்தமான கரங்களுடன் கோர்ட்டை அணுகவில்லை. மனுதாரர் உள்ளிட்ட டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களின் காலணி தயாரிப்புகளையும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் குழு நன்றாக பரிசோதித்து ஒப்புதல் சான்றிதழ் அளித்த பிறகே டெண்டர் நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இதில் முறைகேடு நடந்ததாக தெரியவில்லை. மனுதாரர் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே அந்த நிறுவனத்தை டெண்டர் இறுதிகட்ட நடைமுறைகளில் அனுமதிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் நிறுவனம் கூறி உள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான காலணிகளை வழங்கும் வண்ணம் இந்த டெண்டர் பணிகளை தமிழக அரசு தொடரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com