தேனியில் சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் குறைகளை அடுக்கிய அரசு பள்ளி மாணவ, மாணவிகள்!

தேனி அருகே அரசு பள்ளியில் ஆய்வு செய்த சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினரிடம் மாணவ, மாணவிகள் பல்வேறு குறைகளை அடுக்கினர்.
தேனியில் சட்டமன்ற மனுக்கள் குழுவினரிடம் குறைகளை அடுக்கிய அரசு பள்ளி மாணவ, மாணவிகள்!
Published on

தேனி,

தமிழக சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் தேனி மாவட்டத்தில் இன்று ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். குழுவின் தலைவரான தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமையில், உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன் (கடலூர்), கார்த்திகேயன் (வேலூர்), பாபு (செய்யூர்), பொன்னுச்சாமி (சேந்தமங்கலம்), முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பள்ளிக்கு வெளியே கழிவுநீர் தேங்கி நின்று சுகாதாரக்கேடாக காட்சியளித்தது. அதைப் பார்த்த சட்டமன்ற குழுவினர், அதிகாரிகளை கண்டித்தனர். அப்போது பாபு எம்.எல்.ஏ. 'ஆதிதிராவிடர் நல பள்ளி என்பதால் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கிறீர்களா?' என்று கேள்வி எழுப்பி அதிகாரிகளை கண்டித்தார்.

பின்னர் வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது மாணவ, மாணவிகளிடம் குறைகள் கேட்டறிந்தனர். மாணவ, மாணவிகள் அடுக்கடுக்கான குறைகளை தெரிவித்தனர்.

சட்டமன்ற குழுவினரிடம் மாணவ, மாணவிகள் கூறும்போது, " எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் வசதி வேண்டும். உடற்கல்வி ஆசிரியர் நியமிக்க வேண்டும். மாலை மற்றும் விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் சிலர் பள்ளிக்குள் புகுந்து மது அருந்துகின்றனர். மதுபான பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். பள்ளிக்கு வரும்போது நாங்கள் தான் அவற்றையெல்லாம் சுத்தம் செய்கின்றோம். சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்றனர்.

இதைக்கேட்ட குழுவினர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்களை கண்டித்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com