விளாத்திகுளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்


விளாத்திகுளம்: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை  நீக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2025 3:00 AM IST (Updated: 20 Nov 2025 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் தியாகராஜன், ஒரு மாணவியிடம் தவறாக நடக்க முயன்று ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் தியாகராஜன் என்ற ஹென்றி. இவர் விளாத்திகுளம் அருகே ஒரு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலரை ஒரு கிராமத்திற்கு பாடம் தொடர்பாக செயல்முறை பயிற்சி முகாமுக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவ-மாணவிகளை 6 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது ஆசிரியர் தியாகராஜன், ஒரு மாணவியிடம் தவறாக நடக்க முயன்று ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, ஆசிரியரின் கையை தட்டி விட்டு ஓடிச்சென்று தனது தோழிகளிடம் அழுது கொண்டே நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது பிற மாணவிகளும், தங்களுக்கும் இதே போன்று, ஆசிரியர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளிக்கு வந்த பின்னர் தங்களது வகுப்பு ஆசிரியையிடம் மாணவிகள் நடந்த சம்பவம் பற்றி கூறினர். இதை கேட்ட வகுப்பு ஆசிரியை, மாணவிகளுடன் சென்று தலைமை ஆசிரியர் அன்னை சீபா பிளவர் லைட் என்பவரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினர். அவர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார், ஆசிரியர் தியாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்தியதாக தலைமை ஆசிரியை அன்னை சீபா பிளவர் லைட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவங்களுக்கு இடையே ஆசிரியர் தியாகராஜன் தலைமறைவாகி விட்டார். அவரை 2 தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் ஆசிரியர் தியாகராஜன், தலைமை ஆசிரியை அன்னை சீபா பிளவர் லைட் ஆகியோரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி உத்தரவிட்டார்.

1 More update

Next Story