வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - அன்புமணி

பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அதை பயன்படுத்திக் கொண்டு அந்த குடும்பங்கள் முன்னேறி விடும்.
 அன்புமணி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதல்-அமைச்சர் விஜய் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

31 பேருக்கு அரசு பணி

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அந்த குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான ஆணையை கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையையும் முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் சரியானதா? என்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன என்பது உண்மை. அதைக் கருத்தில் கொண்டும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டும் பார்க்கும் போது இந்த நடவடிக்கைகள் மிகவும் தேவையானவை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

கொடூரமான துப்பாக்கிச் சூடு

ஆனால், தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நிகழ்ந்த இதே போன்ற, இதை விட இன்னும் மோசமான நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது. இத்தகைய உதவிகள் வழங்கப்பட வேண்டிய பல்வேறு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் கூட, அவர்களில் முதன்மையானவர்கள், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு, அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டிலும், பிற அடக்குமுறைகளிலும் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல. ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதை விமர்சிக்க பாட்டாளி மக்கள் கட்சி விரும்பவில்லை. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலையும், பிற உதவிகளும் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளன; அவற்றை வழங்க வேண்டியக் கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது. அவற்றை அரசு தட்டிக் கழிக்க முடியாது.

சமூகநீதி போராட்டம்

1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், பிற தாக்குதல்களிலும் கொல்லப்பட்ட 25 பேரும் சமூகநீதிக்காக போராடியவர்கள்; தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கையை வலியுறுத்தி போராடியவர்கள். அரசையோ, காவல்துறையையோ சீண்டும் வகையிலான எந்த செயல்களிலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனாலும், அறவழியில் போராடிய அப்பாவிகளை காவல்துறையினர் காக்கை, குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்தினார்கள். இந்த பாவத்தை பல தருணங்களில் தமிழக அரசு அங்கீகரித்திருந்தாலும் அதற்கான பரிகாரத்தை இன்று வரை செய்யவில்லை.

வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரமின்றி வாடும் நிலையில் தான் உள்ளன. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், அதை பயன்படுத்திக் கொண்டு அந்த குடும்பங்கள் முன்னேறி விடும். அவர்கள் செய்த தியாகத்தால் 115 சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் தான் உள்ளன. பிறரை வாழ வைத்த அவர்களை தமிழக அரசு வாழ வைக்க வேண்டும்.

அரசு வேலை

எனவே, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போல, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் உடனடியாக அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com