சாதிவெறி கும்பல்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்ப்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சாதிவெறி கும்பல்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய கம்ப்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சமூகவிரோத கும்பல்ககளின் அட்டூழியம் அதிகரிப்பது அதிர்ச்சியாக உள்ளதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை,

இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”சிவகங்கை இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்து ஆதிக்க சாதிவெறி கும்பல் பட்டியலின மக்கள் மீது

கொடூர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது .

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அருகே இடைக்காட்டூர் மேலத்தெருவில் பட்டியலின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அந்த பேருந்து நிறுத்தம் வழியாக அருகில் இருந்த மதுபான கூடத்திற்கு சென்ற கும்பல் ராஜூவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் விடாமல் 3 பைக்குகளில் துரத்தி வந்த கும்பல் ராஜூ வசிக்கும் தெருவிற்குள் புகுந்து கண்ணில் படும் நபர்கள் அனைவரையும் தங்களது கைகளில் வைத்திருக்கும் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் தெருவில் நின்றிருந்த பெண்கள், ஆண்கள் என பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை கண்ட மற்றவர்கள் பயந்து ஓடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல்துறையிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடந்த இந்த சம்பவத்தை வெளியே கூற வேண்டாம் என இந்த மக்களை மிரட்டியதுடன் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகள் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் இதேபோல கும்பல் ஒன்று தெருவிற்குள் புகுந்து சராமாரியாக வெட்டியதில் இருவர் கொலை செய்யப்பட்டு அந்த சம்பவத்தின் துயர் அடங்குவதற்குள் மற்றோரு சம்பவம் அதேபோல மானாமதுரை பகுதியில் அரங்கேறியிருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வகுப்புவாத சக்திகள் சாதிய அமைப்புகளை தனது கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் தமிழ்மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இது போன்ற சமூகவிரோத கும்பல்ககளின் அட்டூழியம் அதிகரிப்பது அதிர்ச்சியாக உள்ளது.

ஆகவே தமிழ்நாடு அரசு சாதிவெறி கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். பாதிக்கப்பட்ட சிவகங்கை இடைக்காட்டூர் கிராம மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com