224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம்: அமைச்சர் ராஜ்மோகன் காசோலைகளை வழங்கினார்

திரைத்துறையினர் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம்: அமைச்சர் ராஜ்மோகன் காசோலைகளை வழங்கினார்
அமைச்சர் ராஜ்மோகன்
Published on: 

சென்னை,

பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் 224 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார். இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:-

திரைப்பட மானிய தொகை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்டு தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள 224 தமிழ் திரைப்படங்களுக்கு உடனடியாக திரைப்பட மானிய தொகைகளை வழங்கிட வேண்டுமென ஆணையிட்டார்கள்.

காசோலைகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அணைக்கிணங்க, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (30.10.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு திரைப்பட மானியம் வழங்கும் விழாவில் 224 தயாரிப்பாளர்களுக்குத் திரைப்பட மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசு

நல்ல கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலும், சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமைந்த திரைப்படங்களை தரமாகவும், சிறிய முதலீட்டிலும் தயாரித்து வெளியிடுவோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தேர்வுக்குழு

அரசு மானியம் பெற விண்ணப்பித்த திரைப்படங்களை பார்வையிட்டு தகுதி வாய்ந்த திரைப்படங்களை தேர்வு செய்திட ஓய்வுபெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் தலைமையிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

பரிந்துரை

மானியம் பெற தகுதிவாய்ந்த திரைப்படங்கள் என ஆண்டிற்கு 28 திரைப்படங்கள் வீதம் 2015 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளுக்கு மொத்தம் 224 திரைப்படங்களை தேர்வு குழுவினர் தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

ஆண்டிற்கு 28 திரைப்படங்கள்

இத்தேர்வு குழுவினர், 2015-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு தேர்வுக்குழுவிற்கு வரப்பெற்ற அனைத்து திரைப்படங்களையும் பார்வையிட்டு, மானியம் பெற தகுதி வாய்ந்த திரைப்படங்களாக ஆண்டிற்கு 28 திரைப்படங்கள் வீதம் 8 ஆண்டுகளுக்கு மொத்தம் 224 திரைப்படங்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

68 லட்சம் ரூபாய்

தேர்வு செய்யப்பட்ட 224 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குத் தலா 7 இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 15 கோடியே 68 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கி சிறப்பித்தார்கள்.

முன்னதாக, இவ்விழாவில் அமைச்சர் தெரிவித்ததாவது:-

விழிப்புணர்வு

தமிழ் சினிமா மக்களின் வாழ்க்கை, பண்பாடு, உணர்வுகள் மற்றும் சமூக பிரச்சினைகளை பிரதிபலிப்பதோடு, சமூகத்தில் விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. பெண் சிசு கொலை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் கருத்தம்மா போன்ற திரைப்படங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பாராட்டுக்குரியவர்கள்

தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும், தரமான திரைப்படங்களை உருவாக்குவதற்கும் தயாரிப்பாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. வணிக நோக்கத்தை தாண்டி, சமூக அக்கறையுடனும் நல்ல கருத்துகளுடனும் சிறந்த படைப்புகளை உருவாக்கி வரும் தயாரிப்பாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

விருதுகள்

கடந்த ஏழு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான மானியங்களை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்குரிய அங்கீகாரமும் மரியாதையும் மீட்டெடுக்கப்படுகின்றது. இனிவருங்காலங்களில், எவ்வித தடையுமின்றி திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கான விருதுகளும், மானியங்களும் வழங்கப்படும். திரைத்துறையின் வளர்ச்சிக்கும், அதனை சார்ந்தவர்களின் நலனுக்கும் அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

கோரிக்கைகள்

திரைத்துறையினர் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இனிவருங்காலங்களில் தமிழ் சினிமாவிற்கான விருதுகள், கலைமாமணி விருதுகள், மாநில விருதுகள் மற்றும் மானியங்கள் தகுதியினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கப்படும். இதுவே முதல்-அமைச்சரின் உறுதியான வழிகாட்டுதலாகும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், அனைவரையும் வரவேற்று பேசினார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் அருண் தம்புராஜ், கூடுதல் இயக்குநர்கள் பாஸ்கரன், தமிழ்செல்வராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பார்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறையை சார்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X