

தூத்துக்குடி,
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தார்.
இந்நிலையில், சூரசம்ஹாரம் மற்றும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து பலர் தன்னிடம் புகார் கூறியதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இன்று செந்தில் ஆண்டவனின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தரிசிக்க வேண்டும் என்று திருச்செந்தூர் சென்றிருந்தேன். சிறுவயதில் இருந்து நான் வணங்கி மகிழும் செந்தில் ஆண்டவன். இன்று பொதுமக்களுக்கான ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே நான் அந்தக் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சென்றேன் என்று சொல்லலாம்.
என்னோடு இருந்தவர்கள் கூட, ‘தொலைக்காட்சியிலேயே பார்க்கலாம், ஏன் நாம் சிரமப்பட வேண்டும்?’ என்று கேட்டார்கள். பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது நாம் செல்லலாம் என்று சென்றேன்.
உண்மையிலேயே லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற இடத்தில் இன்னும் சரியான ஏற்பாடுகளை செய்து இருக்கலாம். சென்ற ஆட்சியும் சரி, இந்த ஆட்சியும் சரி பக்தர்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சியாகவேதான் இருக்கிறது என்பது வேதனை. இன்னும் சில சின்ன சின்ன கவனங்கள் செலுத்தி இருந்தால் கூட மக்கள் இன்னும்வசதியாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றிருக்கலாம்.
பல பேர் என்னிடம் அதைப் பற்றி புகார் கூறினார்கள். ஆனாலும் மக்களோடு மக்களாக இறைவனை தரிசித்து திருப்தியோடு திரும்பினேன். என்னப்பன் செந்தில் ஆண்டவன் நம்முடனும், மக்களுடனும் எப்பொழுதும் துணை இருப்பான்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.