தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18 சதவீத ஜி.எஸ்.டி.யை அரசே ஏற்கும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோப்புப்படம்
தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபையில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என்று பேசினார். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு தொகுதிக்கு ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால், அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையும் இந்த நிதியில் இருந்தே கட்டப்படுவதால், தொகுதி நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இவற்றை கருத்தில்கொண்டு, இதுகுறித்து ஆராய்ந்து, வரி செலுத்துவதால் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்பதை உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.






