

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்தவர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
இணையதளம்
தமிழக அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை வெளியிடுவதற்காக தமிழக அரசு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.கொரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட ஸ்டாப் கொரோனா' என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது. அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை.மே 12-ந்தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும், இதுவரை 5 அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவேற்றம் இல்லை
கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்த அரசாணை இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை.எனவே, கொரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
குறைவான ஊழியர்கள்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு என்பதால் குறைவான ஊழியர்களே வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைந்து அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
ஊக்கத்தொகை
இதேபோல, வக்கீல் ராம்குமார் ஆதித்தன் மற்றொரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.