கருத்துரிமையை நசுக்க சைபர் சட்டங்களை பயன்படுத்தும் அரசின் அறிவிப்பு: உடனே திரும்பப் பெற மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு சமூக ஊடக பதிவுகளை தடை செய்ய அனுப்பியுள்ள நோட்டீஸ்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகவும் ஆபத்தான தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கருத்துரிமையை நசுக்க சைபர் சட்டங்களை பயன்படுத்தும் அரசின் அறிவிப்பு: உடனே திரும்பப் பெற மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவு, தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் உள்ள இடைத்தரகர் பொறுப்பு விதிகளைப் பயன்படுத்தி, சில யூடியூபர்கள் பகிர்ந்தவை உட்பட 18 இணையதள முகவரிகள்/பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் முடக்க அல்லது தடைசெய்யுமாறு எக்ஸ் கார்ப் நிறுவனத்திற்கு மே 8 அன்று ஒரு நீக்கும் அறிவிப்பை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு சமூக ஊடக பதிவுகளை தடை செய்ய அனுப்பியுள்ள இந்த நோட்டீஸ்கள், கருத்துச் சுதந்திரத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகவும் ஆபத்தான தாக்குதலாகும். குறிப்பாக அரசியல் விமர்சனங்களை தடுத்திடும் நோக்கில்  நடவடிக்கை எடுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

அரசை அல்லது அரசியல் கட்சிகளை விமர்சிப்பது குற்றமல்ல; அது ஜனநாயகத்தின் உயிர் மூச்சாகும். கருத்து வேறுபாடுகளை பேசுவதற்கான இடம்தான் ஜனநாயகமே அன்றி அதனை அடக்குவது ஜனநாயகமாகாது. கருத்துரிமையை நசுக்க, சைபர் சட்டங்களை பயன்படுத்துவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com