கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே, இந்த 2 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது எதிர்ப்பார்த்ததுதான். ஒருவேளை நாம் கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம்' என்றார்.






