கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் - உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி அறிக்கை

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 13 நாட்களுக்கு பின்னர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்தார். அவர் உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் - உற்சாகத்துடன் இருப்பதாக ஆஸ்பத்திரி அறிக்கை
Published on

சென்னை,

கொரோனா பாமர மக்களிடம் மட்டுமின்றி மத்திய மந்திரிகள், அமைச்சர்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களிடமும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையிலும் கொரோனா தொற்று ஊடுருவியது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், தீயணைப்பு படை வீரர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள் உள்பட 87 பேர் கடந்த மாதம் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.

இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கவர்னரின் உடலில் தொற்று தீவிரம் இல்லாததால் காவேரி ஆஸ்பத்திரி மருத்துவக் குழுவினரின் ஆலோசனையின் பேரில் அவர் கிண்டி கவர்னர் மாளிகையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார். காவேரி ஆஸ்பத்திரி மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தபடி அவரை கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார். அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவு வந்து உள்ளது.

இதுதொடர்பாக காவேரி ஆஸ்பத்திரி செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கவர்னருடைய மன உறுதி மற்றும் கட்டுப்பாடு ஆகியவை தான் அவர் வேகமாக குணமடைவதற்கு உந்துதலாக இருந்தது. அவர் தொடர்ந்து உற்சாகத்துடன் இருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர், அமைச்சர்கள், நீதிபதிகள் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் மாளிகையில் கவர்னர், தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கவர்னருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாலும், கவர்னர் மாளிகையில் தொற்று பரவல் ஏற்பட்டதாலும் சுதந்திர தின விழா தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com