கவர்னர், தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர் கருணாநிதி உடல்நிலை சீராக இருக்கிறது

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற் கிடையே, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
கவர்னர், தலைவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று நலம் விசாரித்தனர் கருணாநிதி உடல்நிலை சீராக இருக்கிறது
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காவேரி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் டாக்டர்களின் 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

சிகிச்சைக்காக கருணா நிதியை காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் நேற்று அதிகாலை முதலே காவேரி ஆஸ்பத்திரி முன்பு கூடி விட்டனர். நேரம் செல்லச் செல்ல தொண்டர்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. சிலர் வேதனை தாங்காமல் கதறி அழுதனர்.

தொண்டர்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டனர். ஆஸ்பத்திரி நுழைவுவாயிலில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்தனர்.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் நிலை குறித்து நேற்று காலை 11 மணி அளவில் நிருபர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., தலைவரின் (கருணாநிதி) உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. அவர் நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

காவேரி ஆஸ்பத்திரியில் ராஜாத்தியம்மாள், மு.க.அழகிரி, செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கருணாநிதியை கவனித்து வருகின்றனர்.

டாக்டர்கள் அளித்து வரும் சிகிச்சையின் காரணமாக கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று இரவு 8 மணி அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவரை டாக்டர் கள் குழு கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தில் நிருபர் களுக்கு பேட்டி அளித்த போது அவரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வின் காரணமாக உடல் நலக்குறைவால் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவர் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்து வருகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரடியாக சென்று, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்- அமைச்சர் மரியாதைக்குரிய பெரியவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வந்திருக்கிறார்கள் என்றார்.

தி.மு.க. சார்பில், கருணாநிதிக்கு மருத்துவ உதவி ஏதும் கேட்கப்பட்டதா? கேட்டால் தருவதற்கு தயாராக இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, இதுவரை யாரும் கேட்கவில்லை. அவர் முன்னாள் முதல்-அமைச்சர். 5 முறை முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார், நீண்டகாலமாக தி.மு.க. தலைவராக இருக்கிறார், இப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். ஆகவே, தி.மு.க. சார்பாக மருத்துவ உதவி கேட்டால், அவருக்கு மருத்துவ உதவி செய்வதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது என்று பதில் அளித்தார்.

கருணாநிதி நலம் பெற வேண்டி டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிந்த வண்ணம் உள்ளனர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து, கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அப்போது அவர், கருணாநிதி நலம் பெற, தான் இறைவனை பிரார்த்தனை செய்வதாக மு.க.ஸ்டாலினிடம், கவர்னர் தெரிவித்தார்.

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க. ஸ்டாலினிடம் கேட்டு அறிந்தார். நிர்மலா சீதாராமனுடன், தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனும் வந்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து மு.க.ஸ்டாலினிடம், கருணாநிதியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், கருணாநிதி நலமுடன் இருக்கிறார். அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் நலமுடன் வீடு திரும்ப நான் பிரார்த்திக்கிறேன். கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவருடைய குடும்பத்தினரிடம், சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் ஏற்கனவே கேட்டறிந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று நினைக்கிறேன் என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரன், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், நடிகர் பிரபு, இசையமைப்பாளர்கள் இளையராஜா, கணேஷ், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், முன்னாள் அமைச்சர் ஹண்டே, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழ.கருப்பையா, டாக்டர் இ.எஸ். எஸ்.ராமன், கவிஞர் வைரமுத்து, ஆடிட்டர் குருமூர்த்தி, ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி உள்ளிட்டோரும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. குறைவாக இருந்த ரத்த அழுத்தம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த உடனேயே சரியான அளவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் மேற்பார்வையில் இருக்க வேண்டும். உடல்நலம் சீராக இருக்கிறது.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், கருணாநிதி நலமுடன் இருக்கிறார். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவர் விரைவில் நலம்பெற்று வருவார் என்ற நம்பிக்கையோடு எல்லோரும் காத்து இருக்கிறோம் என்றார்.

ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு வைத்திருந்தவர்கள் கூட அவர் மீது மதிப்பு வைத்து இருந்தார்கள். அவருடைய விஷய ஞானம், அரசியலை தெளிவாக எடுத்துக்கூறக்கூடிய தன்மை, மற்றவர்களின் கருத்துகளை ஏற்று அதற்கு பதில் அளிக்கிற திறமை என அசாத்தியமான திறமை உள்ள தலைவர் கருணாநிதி. தி.மு.க.வுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டுக்கும் அவர் ஒரு பெரிய தலைவர். தமிழ்நாட்டுக்கு இந்த தலைமை நீடிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்றார்.

கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில், கருணாநிதி பிறவி போராளி. அவர் விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பி வருவார். விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து வெளியான செய்தியை மேற்கோள் காட்டி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில், கருணாநிதி விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com