பொங்கல் அழைப்பிதழில் கவர்னர் குறிப்பிட்டுள்ள தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமானதா? பா.ஜ.க. கேள்வி

பொங்கல் அழைப்பிதழில் கவர்னர் குறிப்பிட்டுள்ள தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமானதா என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
பொங்கல் அழைப்பிதழில் கவர்னர் குறிப்பிட்டுள்ள தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமானதா? பா.ஜ.க. கேள்வி
Published on

அரசியல் பரபரப்பு

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசித்து முடிந்ததும், அதை கண்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார். அவையில் முதல்-அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோதே கவர்னர் ஆர்.என்.ரவி வெளியே சென்றார். இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கவர்னர் வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழில், 'தமிழக கவர்னர்' என்று அச்சிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாடு கவர்னர் என்று அச்சிடப்பட்டு இருந்ததாகவும் தகவல் பரவியுள்ளது.

தரம் குறைகிறது

இதுபற்றி சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அளித்த பேட்டி வருமாறு:-

கவர்னர் ஒரு கருத்தை சொல்கிறார், அதை அவர் கட்டாயப்படுத்தவில்லை என்றால் அதற்கான மாற்று கருத்துகளால் எதிர்கொள்ளலாம். அதை விட்டுவிட்டு, போஸ்டர் அடித்து ஒட்டுவது, போராடும் மனநிலைக்கு வருவது என்பது எந்த அளவுக்கு கருத்துகளுக்கு மரியாதை கொடுக்கிற பண்பு அவர்களிடம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஜனநாயக ரீதியில் இயங்குகிற இந்த நாட்டில் அவர்கள் தங்களுடைய தரத்தை குறைத்துக்கொண்டு தெருச்சண்டை போலதகுதியை குறைத்துக்கொள்கிறார்கள்.

சட்டவிரோதம் இல்லை

பொங்கல் நிகழ்ச்சி தொடர்பாக கவர்னர் வெளியிட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிட்டிருப்பது பற்றி நீங்கள் கேட்டால், தமிழக கவர்னர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா? மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில், 'தலை நிமிர்கிறது தமிழகம்' என்றெல்லாம் சொல்லவில்லையா?

தமிழகம் என்ற வார்த்தை சட்டவிரோதமான வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா? பால் விலை, மின்சார கட்டணம் உயர்வு போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கு மக்கள் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. அதை திசைதிருப்பும் விதமாக இந்தப் பிரச்சினையை கிளப்புகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com