

சென்னை,
சென்னை பொது நலச்சங்கம் சார்பில் தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா, சென்னை தியாகராயநகரில் நேற்று காலை நடந்தது.
விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, த.மா.கா. மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.எம்.கே. கல்விக்குழும தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், தினமலர் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பாராட்டு விழாவில், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
எனக்கு எப்போதுமே பயம் இருந்தது கிடையாது. ஆனால் கவர்னர் ஆனதற்கு பிறகு எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் என்னை கூச்சமடைய செய்கிறது. மேதகு என்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதையே விரும்புகிறேன். கவர்னர் பதவி எனது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக கருதுகிறேன்.
என்னை பொறுத்தவரையில் அரசியல் தலைவர்களின் கலவையாகவே இருக்க ஆசைப்படுகிறேன். துணிச்சலில் ஜெயலலிதா போலவும், தமிழ் உணர்வில் கருணாநிதி போலவும், சமுதாய அக்கறையில் டாக்டர் ராமதாஸ் போலவும், எளிமையில் விஜயகாந்த் போலவும், பேச்சாற்றலில் வைகோ போலவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
தமிழக மக்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ந்து சந்திக்க முடியாமல் இருப்பதற்கு வருத்தப்படுகிறேன். எப்போதுமே நான் உங்கள் வீட்டு பிள்ளை தான்.
கவர்னர் அலுவலகத்தில் யோகாவை கட்டாயமாக்கி இருக்கிறேன். தினமும் அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து யோகா செய்வதால் ஊழியர்கள் புத்துணர்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்கள். தீவிரமாக தெலுங்கு பேச கற்று வருகிறேன். விரைவில் சரளமாக தெலுங்கு பேசி அசத்துவேன். எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறில்லை.