சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும் பாரதி விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வரவேண்டும் என்று சென்னையில் நடந்த பாரதி விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
சுயநலம் இல்லாமல் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும் பாரதி விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
Published on

சென்னை,

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம் மற்றும் அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாரதி திருவிழா, தேசபக்தி பெருவிழா வருகிற 11-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வரவேற்றார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வாழ்த்தி பேசினார். சிறப்பான பங்களிப்பை கலை வடிவில் கொடுத்ததற்காக திரைப்பட இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு பாரதி விருதை பன்வாரிலால் புரோகித் வழங்கினார். 52 சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை எடுத்துக்கூறும் வீர சுதந்திரம் என்ற கண்காட்சியை பன்வாரிலால் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

நாட்டுக்கு சேவை

விழாவில் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

கவிஞர், பெண் உரிமை போராளி, அறிஞர், பல்வேறு மொழிகளில் புலமை என பன்முகதன்மை பெற்று பாரதியார் விளங்கினார். பாரதியாரின் கவிதைகள் முற்போக்கான சீர்த்திருத்த லட்சியங்களை வெளிப்படுத்துவதாக உள்ளன. நவீன தமிழ் கவிஞர்களுக்கு அவர் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

பாரதியார் போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து நமக்கு வாங்கித்தந்த சுதந்திரத்தை இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும். பாரதியாரை கவுரவப்படுத்தும் விழாக்கள் தேசப்பற்று விதையை இளைஞர்கள் மனதில் விதைத்து, நாட்டை மேம்படுத்துவதற்கான பணியில் ஈடுபடுத்த உதவும். சுயநலம் இல்லாமல் நாட்டின் பெருமைகளை பறைசாற்றவும், சேவை செய்யவும் அதிகமான மக்கள் வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுமைப் பெண்

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

பாரதியின் 100-வது பிறந்தநாள் விழா எட்டயபுரத்தில் நடந்தபோது அதில் கலந்துகொள்வதற்காக பாரதி கண்ட புதுமைப்பெண் ஜெயலலிதா வந்திருந்தார். அது தான் அவர் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி. ஆங்கிலேயர்களை தன்னுடைய வார்த்தை சாட்டையினால் விளாசி தள்ளி, விடுதலை வேட்கையை ஏற்படுத்தியவர் பாரதியார். அவர் குயில்பாட்டு முதல் பாஞ்சாலி சபதம் வரை பல்வேறு அறிவுப்பூர்வமான கவிதை தொகுப்புகளை தமிழ்கூறும் நல் உலகுக்கு வாரி வழங்கியவர்.

இந்திய தேசத்தின் புதுமைப்பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அமைத்தவர் பாரதி. அதற்கு இம்மி அசைவும் இல்லாமல் வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி பாரதியாரின் கனவை நனவாக்கினார். இன்னும் எத்தனை ஆயிரம் காலம் ஆண்டுகள் ஆனாலும் பாரதியாரின் புகழ் மங்காது. பாரதியார் மீது மரியாதை கொண்டுள்ள தமிழக அரசு, அவருக்கு பல்வேறு வகைகளில் சிறப்பு சேர்த்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு திட்டம்

அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசும்போது, பாரதியின் தலைசிறந்த படைப்புகளை அரபு, சீன மொழியிலும் ஜெயலலிதா மொழிபெயர்க்க செய்தார். பாரதியின் படைப்புகள் தற்போது 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் இருக்கக்கூடிய எல்லா மொழிகளிலும் பாரதியை கொண்டுசேர்க்கும் பணியை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தும். பாரதி ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும். திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி போன்று பாரதிக்கும் சிறப்பு செய்யும் புனித பயணத்தை இந்த ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறை தொடங்கும் என்றார்.

வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் ரவி நன்றி கூறினார். மையத்தின் புரவலரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான இல.கணேசன், மூத்த வக்கீல் காந்தி, தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி செட்டியார், திரைப்பட இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிக்குமார், பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன், எழுத்தாளர் சிவசங்கரி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. ஏராளமான மாணவர்கள் பாரதி வேடம் அணிந்து வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com