ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளுக்கு கவர்னரே பொறுப்பு -அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கு தமிழக கவர்னரே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளுக்கு கவர்னரே பொறுப்பு -அன்புமணி ராமதாஸ் பேட்டி
Published on

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் அரையாண்டுகளில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், பயிர் காப்பீடு மூலம் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீட்டு நிறுவனத்திற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 என்ற நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மழை பெய்வதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் அரசு தவறி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். கோடைகாலத்திலேயே நீர்நிலைகள் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில்வே திட்டங்கள் புறக்கணிப்பு

டெல்டா மாவட்டங்களிலும் ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளது. சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் முதல்கட்ட அனுமதியோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றாததை கண்டித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை(அதாவது இன்று) நடைபெறும் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவு வழங்கும்.

உயிரிழப்புக்கு கவர்னர் பொறுப்பு

நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவது போன்ற எந்த வாக்குறுதிகளும் இந்த அரசால் நிறைவேற்றப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு கவர்னர் இதுவரை கையெழுத்திடவில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இனி வரும் காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கவர்னரே பொறுப்பேற்க வேண்டும். எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

தமிழகத்தில் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். அதற்கு முன்னோட்டமாக வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்கள் அமைக்கப்படும். முதல்-அமைச்சர், கவர்னர் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கவர்னர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணியில் இல்லை

பின்னர் மயிலாடுதுறையில் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், பா.ம.க. எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com